
அறந்தாங்கி, செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்புடன் இணைந்து ‘ஒரு நாள் ஒரு ரூபாய்’ (One Day – One Rupee) திட்டம் இன்று ஐஐடி மெட்ராஸ் திட்டத் தலைவர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த திட்டம், மாணவர்களில் பரிவும், சமூகப் பொறுப்பும் வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது. தினசரி ஒரு ரூபாய் என்ற மிகச் சிறிய தொகையிலிருந்து துவங்கி, அவர்களுக்குள் பெரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் கொண்ட திட்டமாக இது அமைந்துள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட சிறப்பு உண்டியல் வழங்கப்படும். மாணவர்கள் தினமும் ஒரு ரூபாய் உண்டியலில் சேமிக்க வேண்டும். மாத இறுதியில் சேமிக்கப்படும் 30 ரூபாய், பள்ளி மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பில் –
பசியால் தவிக்கும் நபர்களுக்கு உணவு வழங்குதல்,
ஆதரவற்றோருக்கு ஆதரவு அளிப்பது,
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி செய்தல்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்,
கிராமத் தத்தெடுப்பு
உள்ளிட்ட பல நற்பணிகள் மாணவர்களால் நேரடியாக மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் மாணவர்கள் தனிப்பட்ட சேமிப்பு பழக்கம், பகிர்வு உணர்வு, சமூக பொறுப்பு, குழுப் பண்பாடு, தலைமைத் திறன்கள் போன்ற பல முன்னேற்ற பண்புகளை கற்றுக்கொள்ள முடியும்.
தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 3,000 க்கும் தொண்டு நிறுவனங்கள், 10,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மற்றும் 2 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்த வலையமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் செயல்படும் மிகப் பெரிய சமூக அமைப்பாகும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு.
போதை இல்லா தமிழ்நாடு இயக்கம், பேரிடர் கால மீட்பு மற்றும் உதவி, பழங்குடியினர் நலன் மற்றும் கிராம முன்னேற்றம், இளைஞர் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சிகள், பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் திறன் மேம்பாடு, மாற்றுத்திறனாளிகள் நலன், வீடற்ற நபர்களுக்கு உதவி, இரத்த தானம், உணவு வழங்கல், மனநலம் விழிப்புணர்வு
நிலைத்த முன்னேற்ற இலக்குகள் (SDG) போன்றவற்றின் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த மிகப் பெரிய சேவைத்தளத்தை மாணவர்களின் வாழ்க்கையுடன் இணைக்கவும், சிறுவயதிலிருந்தே சமூக அக்கறையை வளர்க்கவும் இந்த ‘ஒரு நாள் ஒரு ரூபாய்’ திட்டம் வடிவமைக்கப்பட்டது.
திட்டம் அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், செலக்சன் மெட்ரிக் பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) கையெழுத்திட்டனர்.
பள்ளி நிர்வாகம், இந்த திட்டம் மாணவர்களின் நற்பண்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தது.
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும், பெற்றோரிடமிருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
மிகச்சிறிய தொகையான ஒரு ரூபாய் கூட குழந்தைகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடும் என்பதால் பெற்றோர் திட்டத்தை பாராட்டியுள்ளனர்.
“சமூகத்திற்காகச் செயல்படக்கூடிய பொறுப்புள்ள இளைஞர்களை உருவாக்க கல்வியுடன் சேர்ந்து இத்தகைய வாழ்வியல் பயிற்சிகளும் அவசியம். ‘ஒரு நாள் ஒரு ரூபாய்’ திட்டம் சிறார்களின் மனதில் கருணை, பகிர்வு, சேவை ஆகியவற்றை விதைக்கும் முக்கிய முயற்சி.” என சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐஐடி மெட்ராஸ் சமூக முன்னெடுப்புகள் தலைவரும், அனைவருக்கும் ஐஐடி திட்டத் தலைவர் திரு. ஹரிகிருஷ்ணன் பேசினார்.
இந்நிகழ்வில், பள்ளி தாளாளர் திரு. கண்ணையன் போதையில்லா தமிழ்நாடு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழரசன், பள்ளி முதல்வர் திரு. சுரேஷ்குமார், தமிழ்நாடு தன்னார்வலர்கள் வழிகாட்டி குமரேசன், புதுக்கோட்டை மாவாட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சர்வம் சரவணன், ராகுல் தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த முயற்சி, செலக்சன் பள்ளி மாணவர்களை சமூக உணர்வுள்ள நல்ல குடிமக்களாக மாற்றுகின்றது மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் புதிய தலைமுறைக் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னோடி திட்டமாகவும் மாறியுள்ளது.