Tamil Nadu Volunteers – தமிழ்நாடு தன்னார்வலர்கள்

Translate This Website

Translate This Website

உலக ஆறுகள் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பனை விதைகள் நடும் நெடும் பணி – 2026

தமிழ்நாடு முழுவதும் பனை விதைகள் நடும் நெடும் பணி – 2026

செப்டம்பர் 27 – உலக ஆறுகள் தினத்தையொட்டி மாபெரும் மாநிலம் தழுவிய பனை விதை நடும் பணி

சென்னை:
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து “பனை விதைகள் நடும் நெடும் பணி – 2026” மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம், “கற்பக விருட்சம்” என்று போற்றப்படும் சிறப்புமிக்க மரமாகும். வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்ட பனைமரம், மண் அரிப்பைத் தடுப்பது, நீர்வளப் பாதுகாப்பு, நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. மேலும், பனை சார்ந்த வாழ்வாதாரம் மற்றும் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றோடும் பனைமரம் நெருங்கிய தொடர்புடையது.

பனைமரத்தின் சிறப்பையும், அதன் பாதுகாப்பின் அவசியத்தையும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்கால தலைமுறைகளுக்காக பனை வளத்தை பாதுகாத்து பெருக்குவதற்காகவும் இந்த மாபெரும் மக்கள் பங்கேற்பு இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

செப்டம்பர் 27 – மாநிலம் தழுவிய தொடக்கம்

உலக ஆறுகள் தினமான செப்டம்பர் 27, 2026 அன்று தமிழ்நாட்டின் அனைத்து 38 மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகங்கள், அரசு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் பனை விதைகள் நடும் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அரசு துறைகள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பனை விதைகள் சேகரிப்பு, நடவு செய்யும் இடங்களைத் தேர்வு செய்தல், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தொடர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

உதவி செயலி மூலம் டிஜிட்டல் கண்காணிப்பு

இந்தப் பணியின் முக்கிய சிறப்பம்சமாக, நடப்படும் ஒவ்வொரு பனை விதையும் “உதவி” செயலி (Udhavi App) மூலம் புகைப்படத்துடன் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை (GPS Geo-tagging) விவரங்களுடன் பதிவு செய்யப்படும்.

இதன் மூலம் விதைகள் நடப்பட்ட இடம், எண்ணிக்கை, பங்கேற்றவர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களை வெளிப்படையாக பதிவு செய்து, தொடர்ந்து கண்காணிக்கவும் பராமரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உதவி செயலி மூலம் இதுவரை சுமார் கோடி பனை விதைகள் பதிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு அழைப்பு

இந்த மாநிலம் தழுவிய பனை விதைகள் நடும் நெடும் பணியில் தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைவரும் பெருமளவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பங்கேற்பாளர்கள் தங்கள் நிறுவனம் அல்லது தனிப்பட்ட பெயரில் உதவி செயலி – udhavi.app/panai மூலம் பதிவு செய்து, தங்களால் சேகரிக்கப்படும் மற்றும் நடப்படும் பனை விதைகளை அருகிலுள்ள நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆற்றங்கரைகள், கால்வாய் கரைகள், கடற்கரைப் பகுதிகள் மற்றும் பொருத்தமான காலி நிலங்களில், உரிய அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் நடவு செய்யலாம்.

ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10 பனை விதைகளை விதைத்து, பனை வளத்தை பாதுகாக்கும் இந்த மக்கள் இயக்கத்தில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

“ஒரு விதை – ஒரு தலைமுறையின் பசுமையான எதிர்காலம்” என்ற நோக்கத்துடன், தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை பாதுகாத்து பெருக்குவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

உதவி செயலியில் இணைய:
udhavi.app/panai

தொடர்புக்கு

தமிழ்நாடு தன்னார்வலர்கள் – பனை விதைகள் நடும் நெடும் பணி 2026

9499030241 | 9176720360 | 9940483223 | 9087293339

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *